நிபாவின் வீரியம் தெரியுமா?: கலகம் ஏற்படுத்திய எம்.எல்.ஏ!

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதலால் இன்னும் மக்கள் பீதியிலேயே உள்ளனர்.

இதுவரையில் நிபா வைரஸ் தாக்கியதில் 16 பேர் இறந்துள்ளனர். பலர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் கேரள எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வான பரக்கல் அப்துல்லா, இன்று சட்டமன்றத்துக்கு மாஸ்க் மற்றும் கையுரைகளுடன் வந்திருந்தார்.

அவர் கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கும் குட்டியாடி தொகுதியின் எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர், `கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் எவ்வளவு உள்ளது என்பதை குறிக்கவே மாஸ்க் மற்றும் கையுரைகளுடன் வந்திருக்கிறேன். என் தொகுதியில் இருக்கும் பலர் இப்படித் தான் பாதுகாப்பு உடையணிந்து வெளியே வருகின்றனர்' என்று கூறினார்.

ஆனால், அவரின் இந்த வித்தியாசமான முன்னெடுப்புக்கு கேரள முதல்வர் பினராயி விஜயனும் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பினராயி விஜயன், `எம்.எல்.ஏ தன்னையே ஒரு கோமாளியாக இந்த நடவடிக்கையின் மூலம் காட்டிக் கொண்டுள்ளார்.

நிபா வைரஸ் பரவியதை அடுத்து, கேரள அரசு எவ்வளவும் தீவிரமாக வேலை செய்து, அது மேலும் பரவாமல் தடுத்தது என்பதை உலகமே பார்த்து பாராட்டியது. நிபா வைரஸின் தாக்கம் பெருமளவு மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, இது குறித்து யாரும் பதற்றப்பட வேண்டாம். அனைத்தும் அரசின் கட்டுக்குள் தான் இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>