நீட் தேர்வு: உயிரிழந்த மாணவி பிரதீபாவுக்கு ரூ.7 லட்சம் நிவாரணம்
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துக் கொண்ட விழுப்புரம் மாணவி பிரதீபாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 2018ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 6ம் தேதி நடைபெற்றது. இந்த நீட் தேர்வுக்கான முடிவுகளை சிபிஎஸ்இ நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில், தமிழகத்தில் மொத்தம், 39.55 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருவள்ளூரை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நேற்று முன்தினம் தற்கொலை செய்துக் கொண்டார். பிரதீபா ப்ளஸ் 2வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ப்ளஸ் 2வில் அதிக மதிப்பெண் எடுத்த பிரதீபா நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாததால் விரக்தியில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், பிரதீபா வீட்டில் இருந்த எலி மருந்து எடுத்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் மீண்டும் எதிர்ப்பலைகளை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் நேற்று சட்டசபையிலும் எதிரொலித்தது. அப்போது, இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். தேர்வுகளில் தோல்வி அடைந்தததற்காக மாணவர்கள் தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுக்கக்கூடாது” என்றார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com