படித்த இளம்பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டி: தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: படித்த இளம் பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டி வழங்கப்படும் என்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வாக்குறுதி அளித்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், சுயேச்சைகள் என 58 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கி வருவதால், கட்சிகள் சார்பில் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கொருக்குப்பேட்டை தர்மராஜா தெருவில் உள்ள சுந்தரவினாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திறந்தவெளி ஜீப்பில் பயனித்தவாரு பிரசாரத்தை தொடங்கினர்.

பிரசாரத்தின் போது, வாக்காளர்கள் மத்தியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர் விட்டுச் சென்ற பணிகள் தொடர்ந்து நடத்த அதிமுக வேட்பாளர் மதுசூதனனை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்திட வேண்டும். வீடுகள் இல்லாத மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும். படித்த இளம்பெண்களுக்கு ரூ.20 ஆயிரம் மானியத்துடன் ஜெயலலிதா பிறந்த நாள் முதல் ஸ்கூட்டி வழங்கப்படும். படித்த இளம் பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்” என்றார்

தொடர்ந்து, துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில்,” ஏழை எளிய மக்கள் பொருளாதாரத்தில் மேம்பட சிறப்பான திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் ஜெயலலிதா நிறைவேற்றி தந்தார். அந்த வகையில் 50 சதவீதம் மானிய விலையில் படித்த இளம் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று தொடங்க இருக்கிறது” என்றார்.

More News >>