தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு...உத்தரவிட்டது காவல் ஆய்வாளரா...?
உயர் அதிகாரிகள் யாரும் இல்லாததால் கூட்டத்தை கலைக்க தாமே துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டதாக ஒட்டபிடாரம் காவல் ஆய்வாளர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், ஒட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் மீனாட்சிநாதன்,
எப்.சி.ஐ.ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அளித்த புகாரில், கடந்த மே மாதம் 22ஆம் தேதி 3 ஆயிரம் பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் எப்.சி.ஐ குடோனில் அத்துமீறி நுழைத்து பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியும், தம்முடன் இருந்த போலீசாரை தாக்கி கொலை செய்ய முற்பட்டதாக மீனாட்சிநாதன் புகார் அளித்துள்ளார். ஒலிபெருக்கி மூலம் மூன்று முறை எச்சரித்தும் கேட்காமல் வன்முறையில் ஈடுபட்டு போலீஸாருக்கு காயங்களை ஏற்படுத்தியவர்களை கண்ணீர் புகை குண்டு வீசியும், ரப்பர் தோட்டக்களால் கலைக்க முயன்றதாக அவர் கூறியுள்ளார்.
உயர் அதிகாரிகள் யாரும் இல்லாத நிலையில், பொதுமக்கள் மற்றும் காவலர்களின் உயிரையும் உடமையையும் காப்பாற்ற வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைக்க தாம் ஆணையிட்டதாக மீனாட்சிநாதன் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், காவல் ஆய்வாளரின் இந்த புகார் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com