ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை
ஒக்கி புயலில் உயிரிழந்த, காணாமல் போனவர்களின் குடும்பத்தை சேர்ந்த 188 பேருக்கு அரசு வேலை வழங்க அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம், கேரள உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கடலோர மாவட்டங்களில் கடந்த ஆண்டு இறுதியில் ஒக்கி புயல் தாக்கியது. குறிப்பாக, தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பல மீனவர்கள் புயலில் சிக்கி பலியானார்கள். பலர் மாயமாகினர்.
புயலில் சிக்கி உயிரிழந்தோர் மற்றும் மாயமாகிய குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அளித்தது. மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு உறுதி அளித்தது.
அதன்படி, புயலில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் மாயமானவர்களின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு 188 பேருக்கு அரசு வேலை வழங்க கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட கலெக்டர்கள் தமிழக் அரசுக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பாக பரிந்துரை செய்தனர்.
இந்நிலையில், அவர்களுக்கு பணி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, சமூக நலத்துறை மற்றும் வருவாய் துறையில் பணி ஒதுக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com