ஸ்டெர்லைட் திறப்பு?... வேதாந்தா நிறுவனம் மறுப்பு!

 

மூடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது.

டெல்லி வந்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத், "தூத்துக்குடியில் கலவரம் நடந்ததற்கு,சமூக விரோதிகளும், தொண்டு நிறுவனங்களுமே காரணம், அங்கு அமைதி திரும்புவதற்காக காத்திருக்கிறோம்" என்று கூறினார்.

"ஸ்டெர்லைட் ஆலை ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும், அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மக்களிடம் உண்மை நிலையை எடுத்துக் கூறி, அவர்களின் ஒப்புதலுடன் ஆலையை திறக்க முயற்சிப்போம்" என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்த தகவலை வேதாந்தா நிறுவனம் மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் “தூத்துக்குடியில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்குத்தான் முன்னுரிமை தரப்படும்.

ஆலையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், எங்களால் திறக்க முடியாது. எங்கள் தலைமை செயல் அதிகாரி ஆலை திறப்பு குறித்து கூறியதாக வெளியான அறிவிப்பு உண்மையல்ல” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மாறுபட்ட கருத்துகள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது பொதுமக்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>