குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டும் சிக்கல்... விவசாயிகள் கலக்கம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் வரும் 12-ஆம் தேதி அணையை திறக்க இயலாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி தண்ணீர் திறக்க அப்போதய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் பிறகு சுமார் ஆறு ஆண்டுகளாக ஜூன் மாதம் தண்ணீர் திறக்க இயலாத சூழல் நிலவுகிறது.
நடப்பாண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், போதிய நீர் இல்லாததால் நடப்பாண்டும் ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்க இயலாது என முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பு காவிரி டெல்டா விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com