டிஜிட்டல் இந்தியா திட்டம்: ரயில் நிலையங்களில் வைஃபை வசதி!
நாட்டின் முக்கிய தலைநகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதியை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அமல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை கொடுக்கும் திட்டமும் இருந்தது.
இதையடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே துறையுடன் கைகோத்து நாட்டில் இருக்கும் 400 ரயில் நிலையங்களுக்கு இலவச வை-ஃபை கொடுப்பது என்று முடிவெடுத்தது. இந்த மாபெரும் பணியை செய்ய ரெயில்டெல் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதனுடன் சேர்ந்து வேலை செய்தது கூகுள்.
முதலில் மிகவும் பரபரப்பான 100 ரயில் நிலையங்களில் இந்த இலவச வை-ஃபை சேவை கொடுக்கப்பட்டது. பின்னர், நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் 300 ரயில் நிலையங்களில் இந்த திட்டம் பரவலாக்கப்பட்டது. இந்த திட்டம் குறித்து கூகுள் நிறுவனம் தரப்பில், `இந்தியாவில் இருக்கும் ஒரு பெரும் மக்கள் கூட்டத்துக்கு அதிவேக இணையசேவையை எடுத்துச் செல்வது என்பது ஒரு மகத்தான பயணமாக இருந்தது.
இதில் அவ்வளவு சவால்கள் நிறைந்திருந்தன. இதன் மூலம் அனைத்து இந்தியர்களையும் இணைய பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது' என்றுள்ளது.
ரெயில்-ஒயர் (Railwire) என்ற பெயரில் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் கிடைக்கப் பெறும் இந்த வை-ஃபை, ஒரு பயனருக்கு சுமார் 30 நிமிடங்கள் இணைய சேவையை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும். இந்த அதிவேக இணைய சேவை மூலம் 350 எம்.பி டேட்டா-வை நுகர முடியும்.