எஸ்.வி.சேகரை ஒதுக்கி வைத்திருக்கிறோம்: தமிழிசை அதிரடி பேட்டி
எஸ்.வி.சேகரை கட்சிப்பணியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறாக பேஸ்புக்கில் பதிவிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியவர் நடிகர் எஸ்.வி சேகர். இவர் மீது பலர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்ததை அடுத்து வழக்குகள் தொடரப்பட்டு நடைபெற்று வருகிறது. எஸ்.வி.சேகரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் கூறிய பிறகும், அவரை கைது செய்வதில் போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், எஸ்.வி சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு மத்திய இணை அமைச்சர் பொண்.ராதாகிருஷ்ணனுடன் பேசும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியானது.
இந்த புகைப்பம் பெரும் கண்டனத்தை எழுப்பியது. பொது நிகழ்ச்சிகளில் சாதாரணமாக வந்து கலந்துக் கொள்ளும் எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்யாதது ஏன் என்று கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக கோவை சென்றிருந்தார். அப்போது, தமிழிசை சவுந்தரராஜனிடம் எஸ்.வி.சேகர் விவகாரம் குறித்து கேள்வி கேட்டனர். அப்போது, “பெண்களை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது. எஸ்.வி.சேகரை கட்சி பணியில் இருந்தும் சில பொறுப்புகளில் இருந்தும் ஒதுக்கி வைத்துள்ளோம். எஸ்.வி.சேகர் விஷயத்தில் சட்டம் தன் கடமையை செய்யட்டும்” என்றார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com