பெண்களுக்கான பேஷன் ஷோ - சவுதியில் நடந்த மேஜிக்!

சவுதியில் நடந்த பெண்களுக்கான பேஷன் ஷோவில் ஆடைகள் பறந்து வந்த காட்சிகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

சவுதி பட்டத்து இளவரசராக முகம்மது பின் சல்மான் பொறுப்பேற்ற பிறகு, மகளிருக்கான சட்டங்களில் பல சீர்திருத்த நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, பெண்களுக்கு கார் ஓட்டுவது, மைதானத்திற்கு சென்று விளையாட்டுக்களை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், அரசு பொறுப்பிலும் பல்வேறு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், பெண்கள் மாடலிங் செய்ய அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலுள்ள ஓட்டல் ஒன்றில் பேஷன் ஷோ நடந்தது. புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து ஆண் மாடல்கள் ஒய்யாரமாக நடந்து சென்றனர்.

ஆனால், பெண்களுக்கான ஆடைகள் டிரோன் மூலம் அணி வகுத்தன. இது ஒரு வித்தியாசமான முயற்சி என பேஷன் ஷோ நடத்திய அமைப்பு தெரிவித்துள்ளது.

சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள், சவுதி பேஷன் ஷோவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

சவுதி அரேபியாவை பொறுத்தவரை அங்கு உடை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு இன்னும் கூடுதலாகவே இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது.

More News >>