குரங்கணி தீ விபத்து... விசாரணை அறிக்கை தயார்!
குரங்கணி தீ விபத்து குறித்த விசாரணை அறிக்கை இந்த மாத இறுதியில் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் கடந்த மார்ச் மாதம், பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி, மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட 23 பேர் பலியாகினர். இச்சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க, வருவாய் துறை செயலாளர் அதுல்யா மிஷ்ரா-வை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.
இவர், விபத்து நிகழ்ந்த பகுதிகளில் ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடமும், வன அதிகாரிகளிடமும் நேரடியாக விசாரணை நடத்தினார். குரங்கணி தீ விபத்து தற்செயலாக ஏற்பட்டதா அல்லது, வேண்டுமென்றே தீ வைத்தனரா என்பது போன்ற பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், தீ விபத்தில் சிக்கி இறந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டன. குரங்கணி மலை காட்டுத்தீ விபத்து குறித்து விசாரணை முடிந்தது.
இந்நிலையில் வரும் 27-ஆம் தேதி சட்டப்பேரவை முடிந்த பின்னர், தமிழக அரசிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.