ஆயுதங்கள் செய்ய கூகுள் நிறுவனம் உதவாது - சுந்தர் பிச்சை!
“மக்களை நேரடியாக பாதிக்கக்கூடிய, காயப்படுத்தக்கூடிய நோக்கத்துடன் தயாரிக்கப்படும் ஆயுதங்களுக்கு ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் உள்ளிட்ட எந்த தொழில்நுட்பத்தையும் கூகுள் கொடுத்து உதவாது," என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கூகுள், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் தொடர்பான ‘மாவன்' (Maven) என்ற திட்டத்தில் அமெரிக்க பாதுகாப்பு துறையோடு இணைந்து பணியாற்றி வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் பணியாளர்கள் 4,000 பேர், "கூகுள் மற்றும் அதன் ஒப்பந்ததாரர்கள் ஒருபோதும் போருக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கக்கூடாது" என்ற கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை அடுத்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸின் ஏழு கொள்கைகள் என்ற தமது இணைய குறிப்பில், மக்களை நேரடியாக பாதிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாகும் எந்த தயாரிப்புக்கும் கூகுள் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் உட்பட எந்த தொழில்நுட்பத்தையும் தந்து உதவாது என்று குறிப்பிட்டுள்ளார்.
பணியாற்றும் தேசத்தின் கலாசாரம், சமுதாயம் மற்றும் சட்டங்களுக்கு உரிய மதிப்பளித்து கூகுள் செயல்படும். இனம், பாரம்பரியம், பாலினம், தேசிய இனம், வருமானம், பாலுறவு வகை, தகுதி, அரசியல் மற்றும் மத நம்பிக்கை போன்றவற்றில் நியாயமற்ற தாக்கத்தை உருவாக்குவத்தை தவிர்க்கவே நாங்கள் விரும்புகிறோம்.
ஆயுதங்கள் தவிர்த்து சைபர் பாதுகாப்பு, பயிற்சி, இராணுவ பணிக்கான தேர்ந்தெடுப்பு, உடல்நலம், ஆராய்ச்சி மற்றும் மீட்புப் பணி ஆகிய துறைகளின் அரசாங்கங்கள் மற்றும் இராணுவங்களோடு இணைந்து பணியாற்ற நாங்கள் விரும்புகிறோம் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.