மோடியும் விசாரணைக்கு உள்ளானவர் தான்! இஷரத் வழக்கில் புதுத்தகவல்!
குஜராத்தில் நடந்த இஷரத் ஜஹான் என்கவுன்டர் வழக்கில், ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த 19 வயது பெண்ணான இஷரத் ஜஹான் மற்றும் மூன்று பேர் கடந்த 2004 ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை கொல செய்ய திட்டம் தீட்டினர் என்று குற்றம் சாட்டி என்கவுன்டர் செய்யப்பட்டனர்.
இந்த என்கவுன்டர் போலியானது என்றும், இதற்கு வேறு காரணங்கள் இருக்கிறது என்றும் சந்தேகிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சிபிஐ, 2013 ஆம் ஆண்டு 7 போலீஸ் அதிகராகள் மீது குற்ற பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் போலீஸ் உயர் அதிகாரி வன்சாராவும் ஒருவர்.
இவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணையில் வெளியே இருக்கிறார். இன்னும் இவர் விடுதலை செய்யப்படாததால், தொடர்ந்து நீதிமன்றத்தில் போராடி வருகிறார். இந்நிலையில் இவரது வழக்கறிஞர இந்த வழக்கு குறித்து வாதாடுகையில், `இஷரத் என்கவுன்டர் குறித்த வழக்கு விசாரணையின் போது, குஜராத் முதல்வராக இருந்த மோடியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், இது குறித்து எந்த ஆவணங்களும் பதிவு செய்யப்படவில்லை' என்று கூறினார்.
இந்த நாள் வரை, மோடி நேரடியாக இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டார் என்று யாரும் கூறாத நிலையில், இந்தத் தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இஷரத் ஜஹான் வழக்கில், பாஜக-வின் தேசிய தலைவராக இருக்கும் அமித்ஷா மீதும் குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.
இதற்கு முக்கிய காரணம், சம்பவம் நடந்த போது அவர் தான் குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி விடுவித்தது குறிப்பிடத்தக்கது.