முகமது அலியை மன்னிக்கத் தயார்!- ட்ரம்ப் அறிவிப்பு
உலக குத்துச்சண்டையில் முடிசூடா மன்னராக திகழ்ந்த முகமது அலி முன்னர் ஒரு வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரை சட்ட ரீதியாக மன்னிக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வியட்நாம் மீது அமெரிக்க, 1967 ஆம் ஆண்டு போர் நடத்திக்கொண்டிருந்த போது, முகமது அலி போர் முனைக்குச் சென்று சேவை செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டார்.
ஆனால், அவர் அரசின் உத்தரவை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து அவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முகமது அலிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 10,000 அமெரிக்க டாலர் அபராதம் போடப்பட்டது. இனி குத்துச்சண்டையில் போட்டி போடக் கூடாது என்றும் அவருக்கு கட்டளை விதிக்கப்பட்டது.
ஆனால், வியட்நாம் போர் முடிந்த பின்னர் நிலைமை மாறியது. அமெரிக்க உச்ச நீதிமன்றம், வியட்நாம் போரின் போது ராணுவ சேவையை ஏற்க மறுத்த முகமது அலியின் தண்டனையை ரத்து செய்தது. மீண்டும் முகமது அலி, குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றமே தண்டனையை திரும்ப பெற்றுவிட்ட நிலையில், `முகமது அலிக்கு மன்னிப்பு கொடுக்கும் எண்ணம் எனக்கு இருக்கிறது. அவரின் பெயருக்கு மிகப் பெரிய அவமதிப்பு வந்ததை போக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
1971 ஆம் ஆண்டே முகமது அலி மீதிருந்த குற்றத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இந்நிலையில் மன்னிப்பு கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறப்படுகிறது.