காணாமல்போன மீனவர்களை மீட்கக்கோரி தொடரும் போராட்டம்

ஒகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி தமிழக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரில் மீனவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 11-வது நாளை எட்டியுள்ளது. இன்று கண்களில் கறுப்பு துணி கட்டி அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தினர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவது, பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்திலுள்ள தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மீனவர்கள் முன் வைத்தனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மீனவர்களுக்கு ஆதரவாக நாகை மீனவர்கள் அமைதிப் பேரணி நடத்தினர். நாகை துறைமுகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்ட அவர்களை, நகர காவல்நிலையம் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். மீனவர்களின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்த அவர்கள் பேரணியை கைவிட்டனர்.

இலங்கை கடற்படையால் தமிழக மீவர்களுக்கு ஏற்படும் தொல்லை, இயற்கை பேரிடர்களில் சிக்கி தவியாய் தவிக்கும் மீனவர்களின் துயர்போன்றவை தீர்க்கப்பப்படவேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More News >>