ஸ்டெர்லைட் போராட்டம்: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 6 பேர் கைது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, வாகனங்களுக்கு தீ வைத்த வழக்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 6 பேர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22ம் தேதி போராட்டக்காரர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற கலவரத்தில் 120க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். இதனால், கலவரம் தீவிரமடைந்து துப்பாக்கி சூடு சம்பவம் வரை சென்றது. இந்த சம்பவத்தில் இதுவரை 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாகனங்களுக்கு தீ வைத்த வழக்கில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு பாளையங்ககோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, கலில் ரஹ்மான், முகமது யூனுஸ், முகமது இஸ்ரப், வேல்முருகன், சரவணன், சோட்டையன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.