2018 இறுதிக்குள் நிலாவில் சந்திராயன்-2 விண்கலம்..
2018 இறுதிக்குள் நிலாவை ஆய்வு செய்ய சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
விண்வெளி ஆய்வுக்காக, மத்திய அரசு 10,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மேலும், புதிய 30 பிஎஸ்எல்வி மற்றும் 10 கனரக ராக்கெட்களை உருவாக்க மத்திய அரசு இஸ்ரோவிற்கு அனுமதி வழங்கி உள்ளது.
இது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு அதிக அளவு தொகை ஒதுக்குவது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளார்.
"இந்த ஆண்டுக்குள் ஜி சாட் 9 மற்றும் ஜி சாட் 11 ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை வின்னில் செலுத்தப்பட உள்ளது. மீனவர்களுக்கான பிரத்யேக செயலி, மீன்பிடி தடைக்காலம் முடிந்ததும் பயன்பாட்டிற்கு வர உள்ளது" என்றார் இஸ்ரோ தலைவர் சிவன்.
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், சீனாவை தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் இந்திய மிக முக்கியமான நாடாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.