இந்தியா அபாரம்: சர்வதேச கால்பந்து கோப்பையைக் கைப்பற்றியது!
இந்தியா, கென்யா, சீன தைப்பே, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்ற 2018-ம் ஆண்டுக்கான கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து கோப்பை மும்பையில் நடைபெற்றது.
லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், நேற்று கென்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இறுதிப் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் களம் கண்டது இந்தியா.
கென்யாவோ, தைப்பே மற்றும் நியூசிலாந்து அணிகளை லீக் சுற்றுகளில் தோற்கடித்த நம்பிக்கையில் கோப்பையை தனதாக்கும் கனவோடு களத்தில் இறங்கியது. இந்தத் தொடர் முழுவதிலும் இந்தியா, ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது போல, இறுதிப் போட்டியிலும் மிகவும் அதிரடி ஆட்டத்தை கையாண்டது.
இதனால், போட்டியின் ஆரம்பம் முதலே இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது. இதையடுத்து, போட்டி ஆரம்பித்த 8 வது நிமிடமே ஒரு கோல் போட்டார் இந்தியாவின் கேப்டனும் நட்சத்திர வீரருமான சுனில் சேத்ரி. மறுபடியும் அவரே 29 வது நிமிடத்திலும் இன்னொரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியின் முடிவிலேயே இந்தியா 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
பின்னர், இரண்டாம் பாதியில் கென்ய அணி, கோல் அடிக்க நிறைய முயற்சிகள் எடுத்தது. ஆனால், அதில் ஒன்று கூட வெற்றியடையவில்லை. இதனால், ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் கென்யாவை தோற்கடித்து, இன்டர்கான்டிநென்டல் கோப்பையைக் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் சுனில் சேத்ரி அடித்த கோல்களை கணக்கிட்டால் சர்வதேச அளவில் அவர், 64 கோல்களை போட்டுள்ளார் என்று தெரிகிறது. அவருக்கு இணையாக தற்போது அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மட்டுமே இருக்கிறார்.
சுனில் சேத்ரியும் மெஸ்ஸியும் தற்போது கூட்டாக இரண்டாவது இடத்தில் உள்ளனர். இவர்களுக்கு மேல் போர்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மட்டும் தான் 81 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.