மரம் நடும் திட்டத்தில் லட்சக்கணக்கில் மோசடி: அதிகாரிகள் மீது வழக்கு
தமிழக அரசின் மரம் நடும் திட்டத்தில் போலி பில் தயாரித்து லட்சக்கணக்கில் மோசடி செய்த 6 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011ம் ஆண்டு அறிமுகப்படுத்திய இரண்டு முக்கிய திட்டங்களில் ஒன்று மாபெரும் மரம் நடும் திட்டம் மற்றொன்று பசுமை வீடுகள் திட்டம்.
இத்திட்டத்தை தமிழக வனத்துறை சார்பில் ஜெயலலிதா அப்போது தொடங்கி வைத்தார். இத்திட்டம், கடந்த 2012ம் ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று சுமார் 64 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதேபோல், 2013ம் ஆண்டு 65 லட்சம் மரக்கன்றுகளும், 2014ம்ஆண்டு 66 லட்சம் மரக்கன்றுகளும், 2015ம் ஆண்டு 67 லட்சம் மரக்கன்றுகளும் நடப்பட்டன. தொடர்ந்து, 2016ம் ஆண்டில் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்து 68 லட்சம் கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டன. இதற்காகல ரூ.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்நிலையில், மரம் நடும் திட்டத்தில் மாபெரும் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. குறிப்பாக, 2013 & 2014 மற்றும் 2015&2016ம் ஆண்டுகளில் பல லட்சக்கணக்கில் மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, மரம் நடும் திட்டத்திற்கு செலவானது குறித்து போலி பில்களை தயார் செய்து பல இடங்களில் பல லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
சமுதாய காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 23 போலி பில்கள் தயாரித்து சுமார் ரூ.2 லட்சம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 20 ஆயிரம் வீடுகள் கட்ட ரூ,420 கோடி ஒதுக்கியது. இதில், பஞ்சாயத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் இத்திட்டத்தின் கீழ் பசுமை வீடு கட்டி கொடுக்க வேண்டும்.
ஆனால், நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள வீரசமுத்திரம் கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்த நாகூர்கனி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 3 பேருக்கு பசுமை வீடு கட்ட கொடுத்ததாக தெரியவந்தது. இதனால், 6 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் ஊழல் மற்றுமு மோசடி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.