தமிழகத்தில் 11ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முறையில் மீண்டும் மாற்றம்
By Isaivaani
நீட் தேர்வு நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்ட நிலையில் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதியே ஆகவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அமைச்சர் செங்கோட்டையன் கல்வி அமைச்சராக பதவி ஏற்ற நாள் முதல் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை செய்துவருகிறார். பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளினால் வரும் ஏற்ற தாழ்வு மனப்பான்மையை குறைக்க முடிவுகள் அந்த அந்த பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றும், முதல் இடம் யார் இரண்டாம் இடம் யார் என்ற போட்டி மனப்பான்மை குறையும் என்ற உத்தரவை பிறப்பித்தார்.
தற்போது அதிரடி முடிவினை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் செங்கோட்டையன். அதன்படி 11 மற்றும் 12ம் வகுப்புக்கு இனி மொழிப்பாட தேர்வுகள் ஒரே தேர்வாக நடத்தப்படும் என்றும், இனி தனித்தனியே நடத்தப்படாது என்றும், கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிதுள்ளனர். மாணவர்களின் சுமையையும், மன உளைச்சல்களையும் குறைக்கவே இந்த முடிவை எடுக்கப்பட்டதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு கல்வி ஆண்டு முதலே இந்த முறை அமலுக்கு வரவுள்ளது என்றும், இனி 11ம் மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் தனித்தனியே எழுதிவந்த மொழிப்பாடங்கள் (தமிழ்-2, ஆங்கிலம்-2) என்ற முறை முடித்துவைக்கப்பட்டு, இனி ஒரே தேர்வாக தமிழ் ஒன்று மற்றும் ஆங்கிலம் ஒன்று என்ற புதிய கல்விமுறை அமல் படுத்தப்படவுள்ளது என்றும் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.