சீனா- பாகிஸ்தான் நெருக்கம்!- செக் வைத்த மோடி!
இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக சீனாவுக்கு சென்றார்.
சீனாவின் கிங்டாவோவுக்குச் சென்ற மோடி அங்கு நடந்த ஷாங்காய் எஸ்.சி.ஓ மாநாட்டில் கலந்து கொண்டார். கடந்த ஆண்டு இந்த குழுவில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முழு நேர உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, இந்த ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் பிரதமர் மோடியே சென்றார்.
இதில் பேசிய பிரதமர் மோடி, `அண்டை நாடுகளுடனும் நல்லுறவுடனும் நல்ல தொடர்புடனும் இருக்க வேண்டும் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு. எனவே, போக்குவரத்துக்கோ அல்லது இன்னபிற தொடர்புக்கோ முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு எங்களின் முழு ஆதரவு இருக்கும். ஆனால், அதே நேரத்தில் இந்தத் திட்டங்கள் எங்களின் இறையாண்மையையும் காக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
சீனா, பாகிஸ்தான் வரைக்கும் ஒரு தரை வழிச் சாலையை பெல்ட் அண்டு ரோடு திட்டம் (பி.ஆர்.ஐ) என்ற பெயரில் போட முற்படுகிறது. இந்த சாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகத் தான் செல்லும். இது இந்தியாவுக்கு பல நெருக்கடிகளைத் தரும் என்ற கணிப்பினால் தான், மோடி இத்திடத்துக்கு தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.