ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியம் உயர்வு: 2 வாரங்களில் அரசாணை

தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்கள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்கள் நடத்திய நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. இவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு.

இதையடுத்து, செவிலியர்கள் தரப்பில் தற்போது 7 ஆயிரம் என்று வழங்கப்படும் ஊதியத்தை 22 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று குழுவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மாத ஊதியம் 7 ஆயிரத்தில் இருந்து 14 ஆயிரமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் ஏற்கனவே ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் செவிலியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 7 ஆயிரம் என்ற ஊதியம் 14 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அதற்கான அரசாணை இன்னும் 15 நாட்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், செவிலியர்கள் முன்வைத்த மற்ற கோரிக்கைகளை 6 மாதத்தில் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் செயல்படும் 6 நபர் குழுவுக்கு உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம் பின்னர் இந்த வழக்கை ஒத்திவைத்தது.

More News >>