காங்கிரஸ் தலைவரானார் ராகுல் காந்தி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1998 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார்.
இந்நிலையில், கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியின் துணை தலைவரும் சோனியா காந்தியின் மகனுமாகிய ராகுல் காந்தி டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி தேர்வாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. ராகுல் காந்தியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்ததால் ஏகமனதாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
47 வயதான ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
வருகிற 16ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க உள்ளார். 132 ஆண்டு வரலாறு கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.