கவர்னர் வீட்டில் அமைச்சர்களுடன் படுத்து உறங்கிய கெஜ்ரிவால்
மக்கள் திட்டங்களை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவர்னர் வீட்டில் படுத்து உறங்கி நூதன தர்ணா போராட்டத்தில் கெஜ்ரிவால் ஈடுபட்டுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.
இதுபோன்ற நலத்திட்டங்களை அமல்படுத்த சம்பந்தப்பட்ட துறை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் உத்தரவிட்டார். ஆனால், கெஜ்ரிவாலின் உத்தரவை ஐஏஎஸ் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த கெஜ்ரிவால் மக்கள் திட்டங்களை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கவர்னர் வீட்டில் அதிரடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கெஜ்ரிவால் அமைச்சர்களுடன் நேற்று இரவு துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றிருந்தார். ஆனால், கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கவர்னர் வீட்டின் வரவேற்பு அறையில் பல மணி நேரம் அமர்ந்திருந்து காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். பின்னர், அங்குள்ள சோஃபாவிலேயே கால் நீட்டி படுத்து உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, கெஜ்ரிவால் கூறுகையில், “அரசின் திட்டங்களை ஐஏஎஸ் அதிகாரிகள் நிறைவேற்ற மறுக்கின்றனர். சட்டசபையில் டில்லிக்கு மாநில அரசு அந்தஸ்து அளிக்கும் தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின் கைப்பாவையாக துணை நிலை கவர்னர் செயல்படுவது சரியல்ல” என தெரிவித்தார்.