எண்ணூர் குடிசைப் பகுதிகளில் தீ: பல குடிசைகள் எரிந்தன!
எண்ணூரில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோயில் குப்பத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் சுமார் 60 குடிசைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த எண்ணூர், திருவொற்றியூர் பகுதியில் இருந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு வந்தனர்.
4 தீயணைப்பு வண்டிகளுடன் வந்த வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த விபத்தால் குடிசை வீட்டில் தங்கி இருந்தவர்கள் அவர்களின் உடைமைகளான நகை, பணம் மற்றும் சான்றிதழ்கள் பலவற்றை இழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தீ விபத்துக்கு, சமையல் செய்யும் போது அடுப்பிலிருந்து குடிசைக்கு தீ பரவியது தான் காரணமாக இருக்கும் என்று முதற்கட்ட த்கவல் கூறப்படுகிறது. கட்டுமானப் தொழில் செய்யும் தொழிலாளிகள் காசி விஸ்வநாதர் கோயில் குப்பத்தில் அதிகமாக வசித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் தீ பற்றிய போது வீட்டில் இல்லாத காரணத்தாலும் தீ வேகமாகப் பரவியதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களில் இந்தப் பகுதியில் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு வருவதாக அங்கு வசித்து வருபவர்கள் சொல்கின்றனர்.
மேலும், அரசாங்கம் அங்கிருக்கும் குடிசை வீட்டுக்கு பதில் கான்க்ரீட் கட்டடம் கட்டித் தர வேண்டும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை அடுத்து, திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. சாமி சம்பவ இடத்துக்கு வந்து நிலைமை குறித்து ஆய்வு நடத்தினார்.