திருமாவளவனை குண்டாஸில் கைது செய்யுங்கள் - எச். ராஜா ஆவேசம்
சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதகலவரத்தை தூண்டும் வகையிலும் பேசிவரும் திருமாவளவனை குண்டாஸில் கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா ஆவேசமாகக் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் பேசிய ஹெச்.ராஜா, தொடக்க காலத்தில் இருந்தே திருமாவளவன் வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருவதாக குற்றம் சாட்டினார். சாதி மோதலை உருவாக்கி மதமாற்றம் செய்ய திருமாவளவன் திட்டமிடுவதாக அவர் ஆவேசம் தெரிவித்தார். அவர் பேசி பேச்சுக்களின் ஆதாரங்கள் தங்கள் கைவசம் இருப்பதாக ஹெச்.ராஜா கூறினார்.
திருமாவளவனுக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டவரை கைது செய்த காவல்துறை, அவரை கைது செய்ய தயங்குவது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் திருமாவளவனை குண்டாஸில் கைது செய்ய வேண்டும் என ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று பெரம்பூரில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், “பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் அமைப்பது சரியா?” என்றும், “அதற்காக இந்து கோயில்களை இடித்துவிட்டு புத்த விகார்களைக் கட்ட வேண்டும் என கூறமுடியுமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.