ஃபிபா உலகக்கோப்பை: தமிழகச் சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்!
ஃபிபா உலக கோப்பை 2018 தொடர் நாளை முதல் ஆரம்பமாகிறது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் இத்தொடர் தான், கால்பந்து உலகில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு யார் 'சாம்பின்' என்ற பட்டத்தோடு வளம் வரப் போகிறார் என்பதை முடிவு செய்யும்.
தென் அமெரிக்க நாட்டு அணிகளும் ஐரோப்பாவைச் சேர்ந்த நாடுகளும் ரஷ்யாவில் நடக்கப் போகும் இந்த கால்பந்து உலக கோப்பையைக் கைப்பற்ற கடும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் இந்தியா அணி கலந்து கொள்ளவில்லை என்பது ஒரு புறமிருந்தாலும், இந்திய சிறுவர்களுக்கு இத்தொடரில் அங்கம் வகிக்கும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
இந்த ஆண்டு உலக கோப்பையில், ஒவ்வொரு போட்டி நடப்பதற்கு முன்னரும் ஒரு சிறுவர் அல்லது சிறுமி அதிகாரபூர் போட்டி பந்தை எடுத்து வரும்படி நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. மொத்தம் 64 போட்டிகள். ஆதலால், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 64 சிறுவர்களை இதற்காக தேர்ந்தெடுத்துள்ளனர் ஃபிபா அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாதன்யா ஜான் கே என்ற சிறுமியும் கர்நாடகாவைச் சேர்ந்த ரிஷி தேஜ் என்ற சிறுவனும் முறையே இரண்டு போட்டிகளுக்கு அதிகாரபூர்வ பந்தை ஆடுகளத்துக்கு எடுத்துச் செல்வர்.
இந்தியாவில் கியா மோட்டர்ஸ் இந்த சிறுவர்கள் தேர்வுக்கான நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது. இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, ரஷ்யாவுக்குப் பயணப்படப் போகும் சிறுவர்களின் பெயரை அறிவித்தார்.