வேல்முருகன் ஜாமீன் விவகாரத்தில் போலீஸ் பதில் அளிக்க வேண்டும்: ஐகோர்ட்
By Isaivaani
காவிரி மேலாண்மை அமைக்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடைபெற்ற நேரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிடும் போராட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. போராட்டத்திற்கு காரணமான அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் மீதும், மேலும் சிலர் மீது இரண்டு பிரிவுகளிடையே மோதலை உண்டாகும் வகையில் போராட்டம் நடத்தியதற்கும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இது மட்டுமில்லாமல் காவிரி மேலாண்மைக்காக மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்திய வேளையில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த சிலர் தாக்கியதாக வழக்கு ஒன்று உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் பதிவாகியது.
இந்த இரண்டு வழக்குகளிலும் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வேல்முருகன் சார்பாக ஜாமீன் மனுக்கள் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்திலும், கடலூர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை எதிர்த்தும் ஜாமீன் கேட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் வேல்முருகன். இன்று அந்த மனுவை விசாரித்த ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா ஜாமீன் கேட்டு வேல்முருகன் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதில் அளிக்கும்படி நெய்வேலி நிலக்கரி சுரங்கம் காவல் நிலைய ஆய்வாளர்க்கும், உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர்க்கும் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இந்த வழக்கினை வரும் ஜூன் 18ந் தேதி ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.