மோடி பிட்னஸ் வீடியோ: குமாரசாமி பதிலடி!

சில நாள்களுக்கு முன்னர் விராட் கோலி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டார். அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு, 'நீங்களும் ஃபிட்னஸ் வீடியோ வெளியிடுங்கள்' என்று அழைப்பு விடுத்தார்.

மோடியும் இதற்கு உடனடியாக சம்மதம் தெரிவித்து, 'விராட், சீக்கிரமே எனது வீடியோவை பகிர்வேன்' என்றார். பிரதமர், தான் சொன்னதை காப்பாற்றும் வகையில் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று தனது ஃபிட்னஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவுடன், 'இது தான் எனது காலை நேர உடற்பயிற்சிகளாகும். யோகாவைத் தவிர்த்து நான் ஒரு பஞ்சபூத பாதையில் நடப்பேன். இந்தப் பாதை பஞ்சபூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவை உதாரணமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. இது மிகவும் புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருக்கும். இதை தவிர்த்து நான் மூச்சு பயிற்சிகளும் செய்வேன்' என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவுடன் அவர், கர்நாடக முதல்வர் குமாரசாமி, காமன்வெல் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணிக் பத்ரா மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலரை ஃபிட்னஸ் சேலஞ்சில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கு பதிலளித்த கர்நாடகா முதல்வர் குமாரசாமி, “எனது உடல்நலனில் அக்கறை கொண்ட உங்களுக்கு நன்றி. ஆனால், எனது பிட்னஸை விட கர்நாடகா மாநிலத்தில் பிட்னஸ் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். அதற்கு உங்கள் ஆதரவும் எங்களுக்குத் தேவை” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

More News >>