கவர்னர் அலுவலகத்தில் 3வது நாளாக தொடரும் கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டம்

டெல்லி மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவர்னர் அலுவலகத்தில் இன்றுடன் 3வது நாளாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் டெல்லி அரசின் தலைமை செயலாளர் அனு பிரகாஷ் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக பகுதி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், அமைச்சர்களை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

இதுதொடர்பாக பேச அமைச்சர்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் துணை நிலை கவர்னர் பைஜாலை நேற்று முன்தினம் மாலை சந்தித்தனர். அப்போது, ஐஏஎஸ் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேசன் பொருட்களை வீடுகளுக்க சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.

இதன் பின்னர், கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை அமைச்சர்களுடன் தொடங்கினார். கவர்னர் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என இன்றுடன் மூன்றாவது நாளாக கவர்னர் அலுவலகத்தில் உள்ள சோபாவில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News >>