நீலகிரி பேருந்து விபத்து: பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்

நீலகிரி சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

உதகையில் இருந்து குன்னூர் செல்லும் வழியே அரசு பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி, 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உதகையில் இருந்து குன்னூர் செல்லும் வழியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தகவல் கிடைத்தவுடன் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு சிறப்பான சிகிச்சை அளிக்க நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டேன்.

எனது உத்தரவின் பேரில் மாவட்ட கலெக்டர், போலீஸ் சுப்பிரண்டு, வருவாய் துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைவாக சென்று, மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

More News >>