கடும் பனிப்பொழிவு எதிரொலி: சென்னை ஏர்போர்ட்டில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் திணறல்
சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவக்கால மழை முடிந்து, பனிக்காலம் தொடங்கி உள்ளது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இரவு மற்றும் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதனால், அதிகாலையில் தங்களின் பணிகளுக்கு செல்லுமு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் செல்கின்றனர். இந்த பனிப்பொழிவு எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாத வகையில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.இந்நிலையில், இன்று காலை பனிப்பொழிவு அதிகளவில் இருந்ததால், மொரிஷியஸ் மற்றும் ரியாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு விமானங்கள் ஓடுதளத்தில் தரையிறங்க முடியாமல் அவதிப்பட்டது. இதனால் இந்த விமானங்கள் பெங்களூருக்கு திரும்பிச் சென்றன. உள்நாட்டு விமானங்கள் சுமார் 20 நிமிடங்கள் காலதாமதமாக தரையிறங்கின. விமான சேவை பாதிப்பால் பயணிகள சிரமம் அடைந்தனர்.