5வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்: கெஜ்ரிவாலுக்கு கமல் ஆதரவு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் 5வது நாளாக இன்று கவர்னரின் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் டெல்லி அரசின் தலைமை செயலாளர் அனு பிரகாஷ் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக பகுதி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், அமைச்சர்களை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

இதுதொடர்பாக பேச அமைச்சர்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் துணை நிலை கவர்னர் பைஜாலை கடந்த 3 நாட்களுக்கு முன்பு சந்தித்தனர். அப்போது, ஐஏஎஸ் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேசன் பொருட்களை வீடுகளுக்க சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.

இதன் பின்னர், கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை அமைச்சர்களுடன் தொடங்கினார். கவர்னர் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என இன்றுடன் ஐந்தாவது நாளாக கவர்னர் அலுவலகத்தில் உள்ள தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் டெல்லி அரசுக்கு ஒத்துழைப்பதில்லை என்றும் அக்கட்சி குற்றம் சாட்டுகிறது. டெல்லியில் உள்ள குடிநீர் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்றவற்றால் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்க மாநில அரசு முடங்கிக் கிடக்கிறது. இதனிடையே பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள கெஜ்ரிவால், இப்பிரச்சினையில் தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

கெஜ்ரிவாலின் உள்ளிருப்பு போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் கட்ச தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் தலையிடுவது ஜனநாயகத்தில் ஏற்கத்தக்கது அல்ல. டெல்லியிலும், புதுச்சேரியிலும் நடக்கும் விஷயங்களில் பெரிய வேறுபாடு இல்லை. சிறப்பான மாற்றத்தை விரும்பும் மக்கள் இதை ஏற்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இவரை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதாதள அதிருப்தி தலைவர் சரத் யாதவ் ஆகியோரும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

More News >>