உலகக் கோப்பை கால்பந்து: 2ம் நாள் போட்டியில் ரொனால்டோ ஹாட்ரிக் சாதனை

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது நாள் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் ரொனால்டோ ஹார்ட்ரிக் சாதனை படைத்துள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இதில், ரஷ்யாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் நடைபெற்ற போட்டியில் ரஷ்யா வெற்றிப்பெற்றது. இந்நிலையில், 2ம் நாளான நேற்று மூன்று போட்டிகள் நடைபெற்றன. இதில், முதல் போட்டியில் உருகுவே மற்றும் எகிப்து அணிகளுக்கிடையே நடைபெற்றது.

இவர்களுக்கிடையேயான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி வெற்றப்பெற்றது. உருகுவேவின் ஜோஸே மெய்னஸ் 90வது நிமிடத்தில் கோல் அடித்து, தங்கள் அணிக்கு சாதகமாக விளையாடினார். 1970ம் ஆண்டுக்கு பிறகு, உலகக் கோப்பை போட்டியின் முதல் போட்டியில் முதல் முறையாக உருகுவே வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியை தொடர்ந்து, இரண்டாவதாக ஈரான் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில், 1-0 என்ற கோல் கணக்கில் ஈரான் அணி வெற்றிப்பெற்றது. உலகக் கோப்பை தொடர்களில் இது ஈரானுக்கு கிடைத்த 2வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, உலகமே ஆவலோடு பார்க்க காத்துக் கொண்டிருந்த ஸ்பெயின் மற்றும் நடப்பு ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகல் அணிகள் மோதின. இதில், போட்டி ஆரம்பித்த 4வது நிமிடத்தில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி கிக் மூலம் முதல் கோல் அடித்தார். பதிலுக்கு ஆடிய ஸ்பெயின் அணியின் டியாகோ கோஸ்டா 24வது நிமிடத்தில் தனி ஒருவராக கோல் அடித்து ஆட்டத்தை விறுவிறுப்பாக்க செய்தார்.தொடர்ந்து, ரொனால்டோ 44வது நிமிடத்தில் கோலுக்கு பந்தை வீசி கோல் கணக்கை உயர்த்தியது. இதனால், முதல் பாதி முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் முன்னிலையில் இருந்தது.

பின்னர், இதன் இரண்டாவது பாதி பரபரப்பாக தொடங்கியது. இதில், டியாகோ கோஸ்டா மற்றும் நாச்சோஸ் தலா ஒரு கோல் அடிக்க அதிரடியாக உச்சிக்கு சென்றது ஸ்பெயின். இந்நிலையில், எதிர்பாராத விதமாக போர்ச்சுகல் அணிக்கு 88வது நிமிடத்தில் ப்ரீ கிக் கிடைத்தது. ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்ப சரியான நேரத்தை தேர்வு செய்த ரொனால்டோவின் கோலுக்கான உலகமே காத்திருந்தது. எதிரில் ஸ்பெயின் வீரர்கள் கோலை தடுக்க காத்திருந்த நிலையிலும், கண் இமைக்கும் நேரத்தில் ஸ்பெயின் அணியின் தடுப்புத் தாண்டி, 25 யார்டுகள் தொலைவில் உள்ள கோவிலுக்குள் நேராக பந்து சென்றது. ஹாட்ரிக் கோல் அடித்த ரொனால்டோ, போர்ச்சுகல் அணியை தூக்கு நிறுத்தினார். இந்த மூன்று கோல்களையும் சேர்த்து போர்ச்சுகலுக்காக 84 கோல்களை அடித்துள்ளார் ரொனால்டோ.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இரண்டு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை டிராவில் முடித்தனர். இந்த போட்டியில், ஸ்பெயின் அணி சிறப்பாக விளையாடி இருந்தாலும், ரொனால்டோவின் பரபரப்பான ஆட்டம் ரசிகர்களை கவர்ந்தது.

More News >>