ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
புதுடெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த பீட்டா போன்ற விலங்கு நல அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிற்கு அனுமதி வழங்கக்கோரி மெரினா உள்பட பல்வேறு பகுதியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் வரலாறு காணாத வகையில் அமைந்தது.போராட்டத்தின் வெற்றியாக, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்தரமாக நடத்தும் வகையில் தமிழக அரசு சட்டத்திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதேபோல், கர்நாடகாவில் கம்பளா எனப்படும், எருது பந்தயத்தை தடையின்றி நடத்துவதற்காக சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.இந்த சட்டங்களை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் பொது சட்டங்களை மீறும் வகையில் மாநில அரசுகள் சட்டம் இயற்ற முடியுமா? என நீதிபதிகள் கேற்வி எழுப்பினர். அத்துடன் ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்க்கும் மனுக்கள் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். எனவே, வரும் பொங்கல் தினத்தில் தடையின்றி ஜல்லிக்கட்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.