ஜெனரல் மோட்டார்ஸ் - உயர் பதவியில் சென்னை பெண்
அமெரிக்காவின் கார் தயாரிப்பு நிறுவனங்களில் பெயர் பெற்றது ஜெனரல் மோட்டார்ஸ். இந்நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக திவ்யா சூர்யதேவரா நியமிக்கப்பட இருக்கிறார்.
110 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இந்நிறுவனத்தின் முதல் பெண் தலைமை அதிகாரி இவர்தான். ஜெனரல் மோட்டார்ஸின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மேரி பாராவின் தலைமையின் கீழ் இவர் பணியாற்றுவார்.
தற்போது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெருநிறுவன நிதிப்பிரிவின் துணை தலைவராக இருக்கும் திவ்யா சூர்யதேவராவுக்கு 39 வயதாகிறது. சென்னை பல்கலைக்கழகத்தில் பி.காம் மற்றும் எம்.காம் படிப்புகளை படித்த அவர், ஹார்வர்ட் வணிக கல்லூரியில் எம்.பி.ஏ. முடித்துள்ளார்.
2005-ம் ஆண்டு இந்நிறுவனத்தில் பணியில் சேர்ந்த அவர், 13 ஆண்டுகள் பல்வேறு பதவியில் பணிபுரிந்து தற்போது தலைமை நிதி அதிகாரி நிலைக்கு உயர்ந்துள்ளார்.
தற்போது தலைமை நிதி அதிகாரியாக இருக்கும் சக் ஸ்டீவன்ஸ், நிறுவனத்தின் ஆலோசகராக மாற இருக்கும் நிலையில், இந்த உயரிய பதவிக்கு திவ்யா சூர்யதேவராவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி திவ்யா, புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.