ஓக்கி புயலால் பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

கன்னியாகுமரி: நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஓக்கி புயலால் இழுத்துச் செல்லபட்டு உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ஏற்கனவே அறிவித்திருந்த ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சத்திற்கு நிவாரணத் தொகையை உயர்த்தி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

தமிழகத்தில் ஓக்கி புயலால் கடற்கரை சார்ந்த பகுதிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. ஆழ் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போதே ஆயிரக்கணகான மீனவர்கள் ஓக்கி புயலால் காணாமல் போனார்கள். இதில் பலர் பல்வேறு மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தருமாறும் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டி கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், கன்னியாகுமரியில் ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

தொடர்ந்து தூத்தூர் மீனவ பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மீனவர்கள் தரப்பில் துரித சீரமைப்பு, உடனடி நிவாரணம், போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. பின்னர் மீனவர்களிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில்," ஓக்கி புயலால் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூபாய் 10 லட்சம் என்ற நிவாரணத் தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

கல்வித்தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் கூறினார். மேலும், "புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்ற கோரிக்கை வந்துள்ளது அதை பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்றும் சேதம் குறித்த கணக்கீடு உறுதி செய்ததும் அதற்க்கேற்ப நிவாரணம் அளிக்கப்படும்" என்றும் முதலமைச்சர் கூறினார். ஆழ் கடலில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க சட்ட விதிகள் தளர்த்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடைசி மீனவரை மீட்கும் வரை மீட்பு பணி தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

More News >>