சொகுசு கார் நிறுவனங்களுக்கு அபராதம்!- ஜெர்மனி அரசு நடவடிக்கை!
ஜெர்மனியை தலைமையாகக் கொண்டு சர்வதேச அளவில் செயல்படும் கார் நிறுவனங்களான செய்ம்லர், பார்ஷ் மற்றும் பாஷ் போன்ற உலகின் பிரபலமான கார் நிறுவனங்கள் மீது விதிமுறை மீறல் குற்றச்சாட்டு விதித்துள்ளது ஜெர்மன் அரசாங்கம்.
மாசுக்கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியதாக ஜெர்மனியில் உள்ள முக்கிய நகர நீதிமன்றங்களான ஸ்டர்ட்கர்ட், ப்ரான்ஸ்வெய்க் ஆகியவை விதிமுறை மீறல்களுக்கான அபராதத்தை விதித்து கூடுதல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன.
ப்ரான்ஸ்வெய்க் நீதிமன்றம் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் தான் வோக்ஸ்வேகன் நிறுவனத்துகு 1 பில்லியன் யூரோக்களை அபராதமாக விதிமுறை மீறல்களுக்காக விதித்தது.
தற்போது டெய்ம்லர், பார்ஷ், பாஷ் ஆகிய கார் நிறுவனங்கள் மீதும் அதனோடு தொடர்புடைய நிர்வாகிகள், ஊழியர்கள், நிறுவனம் சாரா ஊழியர்கள் என அனைவர் மீதும் விசாரணை தொடர்ந்து வருகிறது.
ஆட்சி முறை நடவடிக்கைகள் தாண்டி இந்த கார் நிறுவனங்கள் அனைத்தின் மீதும் விதிமுறை மீறல் குற்றச்சாட்டு கடுமையாக்கப்பட்டு விசாரணையும் அதைத் தொடர்ந்து தண்டனையும் அமையும் என ஸ்டட்கர்ட் அரசு வழக்கறிஞர் கழகம் தெரிவித்துள்ளது.