அன்பிற்குரிய மோடி அவர்களேhellip- மோடியைச் சீண்டும் பிரகாஷ் ராஜ்
புது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அம்மாநில ஆளுநர் அனில் பைஜல் இல்லத்தில் காலவரையற்ற தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். கெஜ்ரிவால், அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் 'ஸ்டிரைக்கில்' இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை மீண்டும் தங்கள் பணியை செய்ய வலியுறுத்துமாறு ஆளுநர் பைஜலிடம் சில நாட்களுக்கு முன்னர் வலியுறுத்தினார்.
இதற்கு அவர் சரிவர பதிலளிக்கவில்லை என்று கூறி கடந்த 6 நாட்களாக ஆளுநர் இல்லத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கெஜ்ரிவாலும் அவரது சட்டமன்ற சகாக்களும். இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.
இது குறித்து பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உச்சபட்ச தலைவரான மோடி அவர்களே. யோகா, உடற்பயிற்சி போன்ற உங்கள் ஃபிட்னஸ் சேலஞ்ச்களை செய்வதில் நீங்கள் பிஸியாக இருப்பீர்கள். அவைகளிலிருந்து கொஞ்சம் விலகி உங்களை சுற்றி நடப்பதைப் பாருங்கள்.
அரசு அதிகாரிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் வேலை செய்யச் சொல்லுங்கள். அவருக்க விதிக்கப்பட்ட பணிகளை சரிவர செய்து வருகிறார். உங்கள் பணியை செய்யுங்கள்’ என்று கூறியுள்ளார். இந்த ட்வீட்டை கெஜ்ரிவால் ரீ-ட்வீட் செய்து, ‘நன்றி பிரகாஷ் ஜி’ என்று பதிவிட்டுள்ளார்.
பிரகாஷ் ராஜ், பெங்களூருவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலைக்குப் பிறகு தொடர்ந்து பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளை கருத்தியல் ரீதியாக எதிர்த்து வருகிறார். இந்நிலையில், தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.