பீட்ஸா ஹட்டில் சாப்பிட்டீர்களா? மஞ்சள் காமாலை பரிசோதனை அவசியம்!
அமெரிக்காவில் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தில் ஹெபடைடஸ் 'ஏ' வகை மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக கனவ்ஹா மற்றும் புட்னம் கவுண்டிகளில் நோயின் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.
இரண்டு புகழ்பெற்ற துரித உணவங்களின் ஊழியர்கள் இருவருக்கு ஹெபடைடஸ் 'ஏ' வைரஸ் தாக்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
ஹரிகேனில் உள்ள டாகோ பெல் மற்றும் சார்ல்ஸ்டனில் உள்ள பீட்ஸா ஹட் ஆகிய துரித உணவகங்களில் கடந்த மே 19 முதல் ஜூன் 12 வரையிலான நாட்களில் உணவருந்திய வாடிக்கையாளர்கள், இந்த வைரஸின் தாக்குதல் தங்களுக்கு இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று கனவ்ஹா - சார்ல்ஸ்டன் சுகாதார துறை கேட்டுக்கொண்டுள்ளது.
நோயுற்றதாக கருதப்படும் பணியாளர் தற்போது விடுப்பில் இருப்பதாகவும், மருத்துவர்கள் அனுமதித்த பின்னரே பணிக்கு திரும்ப இருப்பதாகவும் கூறியுள்ள டாகோ பெல் நிர்வாகம், பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், உணவகம் முழுமையும் சுத்திகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலனுக்கு தாங்கள் முன்னுரிமை கொடுப்பதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த இரு உணவகங்களிலும் பாதுகாப்பற்ற தயாரிப்பு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சுற்றுச்சூழல் சுகாதார துறையின் இயக்குநர் ஸ்டான்லி மில்ஸ் தெரிவித்துள்ளார்.