கெஜ்ரிவால் உள்ளிருப்பு போராட்டம்: அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கவர்னர் அலுவலகத்தில் நடத்தி வரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுகாதாரத்துறை அமைச்சர் சந்யேந்திர குமார் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 11ம் தேதி முதல் தொடர்ந்து இன்றுடன் 7வது நாளாக கவர்னர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கெஜ்ரிவாலுடன் டெல்லி அமைச்சர்கள் மூன்று பேரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், பிரதமர் மோடி தலையிட வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, நேற்று மாலை ஆம் ஆத்மி அமைச்சர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் என அனைவரும் ஒன்றாக திரண்டு பேரணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் உடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர குமார் ஜெயினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை உடனடியாக லோக் நாயக் ஜெய் நாராயண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, சத்யேந்திர ஜெயினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.