ஈரானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்-ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு
டெஹ்ரான்: ஈரான் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஈரான் நாட்டில் கடந்த சில நாட்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டு வருவதால் பொது மக்கள் பீதியடைந்து வருகின்றனர். கடந்த மாதம் தென்கிழக்கு பகுதியில் உள்ள கெர்மன் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 530 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, நேற்று மேற்கு பகுதியில் 5.4 என்ற அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், மீண்டும் கெர்மன் மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று நில அதிர்வு ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 6.2 என்ற அளவில் பதிவாகி உள்ளது. 57 கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள், சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு தற்போது தற்காலிக குடியிருப்புகள் அமைத்து தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.