பிரிட்டன் மாணவர் விசா.. சீனாவுக்கு வெண்ணெய் - இந்தியாவுக்கு சுண்ணாம்பு!
பிரிட்டனில் உயர்கல்வி பயில பல நாடுகளின் மாணவர்கள் விரும்புகின்றனர். வெளிநாட்டு மாணவர்களுக்கு பிரிட்டன், டயர் 4 என்ற விசாவினை வழங்குகிறது.
மாணவருக்கு விசா வழங்கும் நடைமுறையை எளிதாக்க குடிபுகல் பிரிவில் புதிய கொள்கை விதிகளுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. வரும் ஜூலை 6-ம் தேதி முதல் இப்புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படும்.
புதிய கொள்கை முடிவின்படி, ஏறக்குறைய 25 நாடுகளின் மாணவ மாணவியருக்கு கல்வி, பொருளாதாரம் மற்றும் ஆங்கில மொழி புலமை ஆகியன பற்றிய சோதனை எளிதாக அமையும். உலக சிறப்பு வாய்ந்த பிரிட்டன் கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு மற்ற நாடுகளின் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் இவ்வாறு விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரிட்டனின் உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
எளிய விசா சோதனையை எதிர்கொள்ளும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, கனடா, நியூஸிலாந்து போன்ற நாடுகளோடு புதிதாக சீனா, பஹ்ரைன், செர்பியா உள்ளிட்ட நாடுகள் சேர்க்கப்பட்டு 25க்கும் மேற்பட்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலிலிருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்திய மாணவர்கள், பிரிட்டனில் படிப்பதற்கு மாணவர் விசா வாங்குவதற்கு இனி கடுமையான நெறிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டியது வரும்.
பிரிட்டனில் படிக்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வரும் நிலையில், இப்புதிய விதி குறித்து இந்திய வம்சாவளி தொழிலதிபரும், சர்வதேச மாணவர் உறவுக்கான பிரிட்டன் கவுன்சிலின் தலைவருமான கரன் பில்லிமோரியா பிரபு அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டன் உள்துறை அலுவலகம், “நாங்கள் இந்திய மாணவர்களை வரவேற்கிறோம். இந்தியாவிலிருந்து விண்ணப்பித்தோரில் கடந்த 2014-ம் ஆண்டு விண்ணப்பித்தோரில் 86 சதவீதத்தினரும், அதற்கு முந்தைய ஆண்டு 83 சதவீதத்தினரும் மாணவர் விசாவை பெற்றனர்.
தற்போது 90 சதவீதம் இந்திய மாணவருக்கு, பிரிட்டனில் படிப்பதற்கான விசா வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கிறோம். அமெரிக்கா, சீனா தேசங்களுக்கு அடுத்தபடியான எண்ணிக்கையில் இந்தியரே விசாவை பெறுகின்றனர்," என்று கூறியுள்ளது.
ஒரு கண்ணில் வெண்ணெயும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போன்று, சீனாவுக்கு விதிகளை எளிமைப்படுத்தியுள்ள பிரிட்டன், இந்திய மாணவருக்கான விதிகளை கடுமைப்படுத்தியுள்ளது.