6 மாதங்களுக்கு முன் மாயமான சிறுவன் கொலை?
சென்னையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் மாயமான சிறுவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளர் பெருமாளின், 15 வயது மகன் ராஜேஷ். இவர் கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி மாயமாகியுள்ளார். இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுவனை தேடி வந்தனர்.
விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் அலுவலகத்தில் பரத் என்ற இளைஞரும், 2 சிறுவர்களும் சரணடைய வந்தனர். விசாரணையில், நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் இளைஞர் பரத் உள்பட 4 பேர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, அங்கு வந்த ராஜேஷ் கத்தியைகாட்டி மிரட்டி பணம் கேட்ட போது, தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த சிறுவர்கள் ஒன்றிணைந்து, கிரிக்கெட் மட்டையால் தலையில் தாக்கியதில் ராஜேஷ் உயிரிழந்துவிட்டதாகவும் சரணடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர், நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் குழிதோண்டி ராஜேஷ் உடலை புதைத்துவிட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்த, ராஜேஷ் உடலை தோண்டி எடுக்க சூளைமேடு போலீசார் முடிவு செய்துள்ளனர்.