செல்ஃபியால் உயிரைவிட்ட இளைஞர்கள்! தொடரும் சோகம்!
கோவாவுக்கு சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது கடலில் மூழ்கி உயிரழந்துள்ளனர்.
இரண்டு பேரும் வெவ்வேறு இடத்தில் நடந்த சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு சம்பவம் குறித்து கோவா மாநில போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜிவ்பா தால்வி, 'தமிழ்நாட்டின் வேலூரைச் சேர்ந்த 28 வயதாகும் தினேஷ் குமார் ரங்கநாதன், அவரின் இரண்டு நண்பர்களுடன் வடக்கு கோவாவில் இருக்கும் பாகா கடற்கரையில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது ஒரு பெரும் அலை அவர்களை நிலைகுலையச் செய்துள்ளது. செல்ஃபி எடுக்க முயன்ற மூவரையும் கடல் அலை உள்ளே இழுத்துள்ளது. இதையடுத்து, மூவரில் இருவர் போராடி கரைக்கு வந்தடைந்தனர். ஆனால், தினேஷ் குமார் கடலில் மூழ்கி இறந்துவிட்டார். சில மணி நேரம் தேடுதல் பணிக்குப் பிறகு அவரின் உடல் கண்டெக்கப்பட்டது' என்று கூறினார்.
இதைப் போன்றே தமிழகத்தைச் சேர்ந்த 33 வயதாகும் சசிகுமார் வாசன் என்கின்றவரும் வடக்கு கோவாவில் இருக்கும் சிக்கூரிம் கடற்கரைக்கு அருகே சென்று செல்ஃபி எடுக்க முயன்று கடலில் மூழ்கி இறந்துள்ளார். 'இருவரின் உடலிலும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு விட்டது. சீக்கிரமே அவர்களின் உடல் சம்பந்தப்பட்ட உறவினர்களின் இடத்தில் ஒப்படைக்கப்படும்' என்று போலீஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.