அதிர்ந்த ஜப்பான்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு
ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஒரு குழந்தை உட்பட இருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் கூறப்படுகிறது.
ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் இன்று காலை 5.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. மிக பிஸியான காலை 8 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
ரிக்டர் அளவில் மிகக் குறைவான அளவிலேயே நிலநடுக்கம் பதிவாகி இருந்தாலும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம் என்கின்றன அங்கிருந்து செய்தி தெரிவிக்கும் ஊடகங்கள். ஆனாலும், சுனாமி போன்ற பெரும் பாதிப்பு இல்லையென்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் மின்சாரப் பகிர்வு பாதிப்புத்தான் அதிகம் என்று சொல்லப்படுகிறது. ஒசாகா பகுதியில் கிட்டத்த 170,000 வீடுகளுக்கு மின்சாரம் வெட்டுபட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து உள்ளூர் போலீஸ், '9 வயதாகும் ஒரு சிறுமி இந்த நிலநடுக்கம் காரணமாக பலியாகியுள்ளார்' என்று கூறியுள்ளது.
இதையடுத்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, 'அரசு இந்த சம்பவத்தில் ஒற்றுமையாக இயங்கி வருகிறது. மக்களின் உயிரைக் காப்பாற்றுவது தான் அரசின் முதல் நோக்கம்' என்று தெரிவித்துள்ளார். இந்த நிலநடுக்கத்தை அடுத்து, ஒசாகா பகுதியில் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.