காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர் - என்ன சொல்கிறது கர்நாடகா?

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடத்திய பின்னரே உறுப்பினர் நியமனம் குறித்து முடிவெடுக்கப்படும் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம், நீர் முறைப்படுத்தும் குழு உறுப்பினரை ஜூன் 12ஆம் தேதிக்குள் கர்நாடகா அரசு நியமிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை கர்நாடகா அரசு உறுப்பினர் நியமன பட்டியலை மத்திய அரசிடம் தாக்கல் செய்யவில்லை.

இது குறித்து கர்நாடகா மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாரிடம் கேட்ட போது, "காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதால் கர்நாடகாவுக்கு சில பிரச்சினைகள் இருக்கிறது. இந்த பிரச்சினையை பொறுத்தவரை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, அது அரசாணையாகவும் வெளியிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.

“அதை கர்நாடகா அரசு சட்ட ரீதியாக பின்பற்றும், இருப்பினும் ஆணையம் அமைப்பதில் உள்ள சிக்கல் குறித்து தெளிவு பெற்ற பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும். இந்த ஆண்டு பருவமழை தொடங்கி நன்றாக பெய்து வருவதன் காரணமாக அணைகளில் தற்போது 51 டி.எம்.சி நீர் உள்ளது.

ஏற்கெனவே தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு 6.2 டி.எம்.சி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தொடர்ந்து மழைக்கு வாய்ப்புள்ளதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் எந்த சிக்கலும் இருக்காது" என்றார் அமைச்சர் டி.கே.சிவக்குமார்.

More News >>