தமிழக அரசுக்கு ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை!

சேலம், மற்றும் தூத்துக்குடி மக்களை காவல்துறை மூலம் மிரட்டுவதை அரசு நிறுத்தி கொள்ளவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை-சேலம் இடையே எட்டு வழிச்சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு நிலம் தர மறுப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை காவல்துறை மூலம் தமிழக அரசு மிரட்டுவதாக புகார் எழுந்தது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின், “காவல்துறை மூலம் விவசாயிகள், பொதுமக்களை மிரட்டுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை பலியிட்டு ஹிட்லர் பாணி பயங்கரத்துக்கு உயிரூட்டுவதை அரசு நிறுத்தி கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

"விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவசர அவசரமாக நிலத்தை அளந்து தமிழக அரசு கல் ஊன்றி வருவது கண்டனத்திற்குரியதாகும். அத்துடன் நிலம் தர மறுப்பவர்களை இரவில் வீடு புகுந்து கைது செய்வது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய போக்கை தமிழக அரசு நிறுத்திக்கொள்ளவில்லை என்றால், மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்" என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

More News >>