இலவச விசா - துபாய், அபுதாபியில் இரண்டு நாட்கள் தங்கலாம்

துபாய், அபுதாபி வழியாக ஏனைய சர்வதேச முனையங்களுக்குச் செல்லும் பயணியர் இந்த இரு இடங்களிலும் இரண்டு நாட்கள் கழிக்கக்கூடிய வழித்தட (டிரான்சிஸ்ட்) விசாவினை கட்டணமின்றி வழங்க ஐக்கிய அமீரகம் முடிவு செய்துள்ளது.

துபாய் நாட்டு சுற்றுலா துறை தரும் புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவிலிருந்துதான் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் அங்கு செல்கின்றனர். ஆண்டுதோறும் 1 லட்சத்து 80 ஆயிரம் இந்தியர்கள், சுற்றுலாவுக்காகவும் நகைகள் வாங்கவும் ஐக்கிய அமீரகம் செல்கின்றனர்.

இந்தியாவின் 75 சதவீத சர்வதேச பயணிகள் துபாய் மற்றும் அபுதாபி ஆகிய இரு அமீரக நகரங்கள் வழியாக செல்வதால், இந்த 48 மணி நேர இலவச விசா வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விசாவினை 50 திர்ஹாம் (ஏறத்தாழ ரூ.930) கட்டணம் செலுத்தி 96 மணி நேரத்திற்கு நீட்டித்துக் கொள்ளலாம். இது நடைமுறைக்கு வரும் நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதுதவிர, விசா விதிகளில் இரு முக்கிய மாற்றங்களையும் ஐக்கிய அமீரகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள், தங்கள் படிப்பு காலம் முடிந்த பிறகும் இரு ஆண்டுகள் தங்கிக்கொள்ளலாம்.

இன்னொரு விதியின்படி, விசா காலம் முடிந்து தங்கியிருந்து வேலை செய்ய விரும்புவோருக்கான 6 மாத விசா அறிமுகம் ஆகிறது. மேலும், விசா முடிந்ததும் நாட்டை விட்டு வெளியேறாமல், உரிய கட்டணத்தை செலுத்தி புதுப்பித்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

More News >>