பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு பை... பை - பிரிட்டன் மெக்டொனால்டு முடிவு
நெகிழி என்னும் பிளாஸ்டிக், சுற்றுச்சூழலை சீரழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குப்பையில் சேரும் பிளாஸ்டிக்குகளை உண்பதன் மூலம் பறவைகள், மீன்கள் மற்றும் வனவிலங்குகள் உயிரிழக்கின்றன அல்லது தாங்கள் அங்கம் வகிக்கும் உணவு சங்கிலியில் நச்சுத்தன்மை பரவ காரணமாகின்றன.
இது குறித்த பொதுவிவாதத்தை தொடர்ந்து, தங்கள் வாடிக்கையாளர்கள் பிளாஸ்டிக்கை தவிர்க்கும்படி வைத்த கோரிக்கையை ஏற்று, மெக்டொனால்டு பிளாஸ்டிக் ஸ்ட்ராவினை பயன்படுத்துவதை நிறுத்த இருப்பதாக பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் உள்ள மெக்டொனால்டு உணவகங்களின் தலைமை செயல் அதிகாரி பால் பாம்ராய் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மெக்டொனால்டு வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு பதில் காகிதத்தினாலான ஸ்ட்ராக்கள் வழங்கப்படும் என்றும், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் மறைவாக வைக்கப்பட்டிருக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் குறிப்பாக பிளாஸ்டிக் கேட்டால் மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் உள்ள மெக்டொனால்டு உணவகங்களில் வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க இருக்கும் பிளாஸ்டிக் தவிர்ப்பு முயற்சி 2019-ம் ஆண்டில் நிறைவடையும் என்றும் தெரிகிறது.
பிரிட்டனில் மெக்டொனால்டு நிறுவனத்துக்கு 1,274 உணவகங்களும், அயர்லாந்தில் 89 உணவகங்களும் உள்ளன. அமெரிக்காவில் உள்ள 14,000-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இது குறைவுதான் என்றாலும், இந்த நல்ல முயற்சி மற்ற இடங்களுக்கும் தொடரும் என்று நம்பப்படுகிறது.